சென்னை தாம்பரம், மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சை செங்கிப்பட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரானா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை, சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரானா தடுப்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கினார்.
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்த இலங்கை துணை தூதரக அதிகாரி பிரசாந்தி, கொரானா வைரஸ் தடுப்பு பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர், தலைமை செயலாளர் சண்முகத்துடன் இணைந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய மருத்துவ பரிசோதனை மையங்களை உருவாக்கும் பணி நடைபெறுவதாக கூறினார்.
கொரானா கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு விமான நிலையங்களில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் வெயில் அதிகம் இருப்பதால் வைரஸ் பரவாது என்று கூறப்படுவது சரியான தகவல் இல்லை.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
தற்போது 10 லட்சம் முக கவசங்கள் கையிருப்பு உள்ளதோடு, தேவையான மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார்நிலையில் உள்ளதாகவும் நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க.! என விஜயபாஸ்கர் கூறினார்
" alt="" aria-hidden="true" />